Wednesday, September 13, 2006

கேரளம்: தொழிநுட்பத்தின் அரசியல்
- மு.மயூரன்

Monday, 11 September 2006
தொழிநுட்பம் எப்போதும் வெறும் தொழிநுட்பம் அல்ல. அது அரசியல்.கேரள மாநில அரசு கோக் பெப்சியை அடுத்து மைக்ரோசொப்டின் மடியில் கைவைத்திருப்பதை இங்கே பலரால் செரித்துக்கொள்ள முடியவில்லை. மாணவர்களின் எதிர்காலம் பற்றியும், இந்தியாவின் தொழிநுட்பவளர்ச்சி பற்றியுமான கவலைப்பாடுகள் உச்சஸ்தாயியில் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

நவீன "கிழக்கிந்திய கம்பனிகளின்" நாடுபிடிக்கும் கனவுகளுக்கு எதிராக இருக்கும் இவ்வாறான முடிவுகள் நாடு பிடிப்பவர்களுக்கு சார்பாக நிற்கும் எட்டப்பர் கூட்டத்திற்கு தாங்க முடியாத செய்திகள் தான். இந்த சுயநலவாதிகளின் பிரச்சாரத்துக்கும் பகட்டுக்கும் அடிமையாகிப்போய் அறிவை அடகு வைத்துவிட்ட இன்னொருகூட்டம் திடீரென நாட்டுப்பற்று நாடகத்தை நடத்தத்தொடங்கிவிட்டது.
இவ்வளவுக்கும் கேரள மாநிலத்தில் ஓட்டுப்பொறுக்கும் இடதுசாரி கட்சி ஒன்று அதிகாரத்தில் இருக்கிறது. வெறும் கொடியில் சிவப்பு இருந்தாலேகூட பலருக்கு குலை நடுக்கம் பிடிக்கிறது. என்னசெய்ய?
கேரள அரசு கோக் பெப்சியை அடித்துவிரட்டியதிலும் சரி தற்போது மைக்ரோசொப்டுக்கு அடி கொடுத்ததிலும் சரி மிதமான அணுகுமுறையையே கையாள்கிறது. வர்க்கசார்பான கொள்கைகளையோ, காலனியாதிக்க எதிர்ப்பையோ பற்றி பேசாமல் மிதமான காரணங்களைச்சொல்லி பெரு நிறுவனங்களோடு மோதப்பார்க்கிறது. கோக் பெப்சி நச்சுப்பொருட்களைக்கொண்டுள்ளது அது எம் மக்களின் உடல் நலத்துக்கு நல்லதல்ல எனவே அவற்றை தடைசெய்கிறோம் என்றார்கள். இப்போது திறந்த மூல தொழிநுட்பம் கல்வித்துறைக்கும், மாநிலத்தின் தொழிநுட்பம் நன்மை பயக்கும் அதனால் திறந்த் மூல தொழிநுட்ப பயன்பாட்டை உற்சாகப்படுத்துகிறோம் என்றவாறு மைக்ரோசொப்டுக்கு ஆப்புவைக்கிறார்கள்.
அமைச்சர் பேபி சொல்கிறார்,
“We are not banning Microsoft but we encouraging open source. Unlike in other states where the Microsoft Windows platform has a dominant share, 60% of our schools here aleady are on the free GNU/Linux software for a few years now. We are just pushing the envelope further.”
வாக்கு கட்சி ஒன்று தனது சட்டசபையை வைத்துக்கொண்டு இதைவிட தீவிரமாக முடிவெடுக்க முடியாதுதான். எப்படியோ இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
திறந்தமூல இயக்கத்தை முதலாளிய எதிர்ப்பு கண்ணோட்டத்தில் நான் அணுகுவதுகுறித்து நற்கீரன் பலமுறை தனது மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.திறந்த மூல இயக்கம் தொடர்பான என்னுடைய இந்த அணுகுமுறை முதலாளிய எதிர்ப்பு அடிப்படையில் என்பதை விட ஏகாதிபத்திய எதிர்ப்பு, மறுகாலனியாதிக்க எதிர்ப்பு போன்ற அடிப்படைகளிலேயே அமைகிறது.
திறந்தமூல இயக்கத்தின் அடிப்படை, பொதுமக்கள் உரிமம்தான். இந்த உரிமம், ஏகாதிபத்தியத்தை அனுமதிக்காத கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. எந்த ஒரு நிறுவனமும் திறந்தமூலத்தை பயன்படுத்தி லாபகரமாக வியாபாரம் செய்யலாம். தடை இல்லை. ஆனால் கொள்ளை லாபம் ஈட்டமுடியாது.
சுரண்டல் நிறுவனங்களின் மென்பானங்களுக்கும் மைக்ரோசொப்ட் உற்பத்திகளுக்கும் இடையில் அடிப்படையில் ஒரு பாரிய வேறுபாடு இருக்கிறது. முன்னையது,
*தூலமான பொருளொன்றினை உற்பத்தி செய்கிறது.*தூலமான மூலப்பொருட்களை எம் மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.*பொருண்மையான நுகர்வுப்பண்டம் ஒன்றை விற்பனை செய்வதோடு பொருண்மையான் பெரிய சொத்துக்களை வைத்திருக்கிறது.
சுரண்டல் இங்கே கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால் மைக்ரோசொப்ட் விவகாரம் அப்படி அல்ல. அதனால்தான் இன்று நவகாலனியாதிக்க எதிர்ப்பு அரசியல் செய்யும் கம்யூனிஸ்டுக்கள்கூட எந்த உறுத்தலும் இல்லாமல் மைக்ரோசொப்ட் உற்பத்திகளை பயன்படுத்த முடிகிறது. அதை பற்றி அலட்டிக்கொள்ளாமலிருக்கமுடிகிறது. இன்னும் சொல்லப்போனால் நவகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாட்டின் ஒளிப்படங்களை, ஒலிப்பேழைகளை நான் வின்டோஸ் மீடியா வடிவங்களிலேயே தரவிறக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. வின்டோஸ் மீடியாவடிவம் என்பது ஏகாதிபத்தியத்தின் குறியீடு என்பதை தொழிநுட்ப அரசியலோடு பரிச்சயம் கொண்டவர்களுக்கு விளக்கத்தேவையில்லை.
இலங்கையில் மைக்ரோசொப்டுக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து சிறிய ஓர் அலுவலகம் தான். எந்த ஒரு நாட்டிலும் அவர்கள் சுரண்டல் நடத்த இந்த இடம் போதுமானது. விரியும் மெய்நிகர் உலகத்தில் தான் அவர்கள் ராஜாங்கம் நடக்கிறதே.
பிரிடிஷ் கிழக்கிந்திய கம்பனியின் நவீன வடிவங்களான இந்த பன்னாட்டு சுரண்டல் அமைப்புக்கள் தமது சுரண்டல் வடிவங்களையும் மிக நவீனமாக அமைத்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால் நன்றாக அரித்து சலித்து அடிப்படைக்கு வந்தால், ஏகாதிபத்தியம் மூலமான கட்டற்ற சுரண்டலே அவர்களின் நோக்கம் என்பது மிகத்தெளிவாகவே தெரியும்.
தகவற் தொழிநுட்பத்துறையில் இந்தியா போன்ற மூளைசாலி நாடுகளை கருவறுத்து எதிர்காலத்தில் தம்மீது தங்கியிருக்க வைக்கும் செயற்றிட்டத்தின் படிகளே ITPark உள்ளிட்ட வடிவங்கள்.
இந்திய மூளைகளையே விலைக்கு வாங்கி, இந்திய மூளைகளைக்கொண்டே தொழிநுட்பங்களை உருவாக்கி, அதனை தமது பெயரில் , தமது சொத்தாக்கி, அதனை இந்தியாவிலேயே விற்று, இந்தியர்களை அதற்கு அடிமையாக்கி கட்டற்ற சுரண்டலுக்கு இந்தியாவை கைப்பற்றுகிறார்கள். இந்தியர்களுக்கோ, மைரோசொப்டின் உயர் பீடங்களில் இந்தியர்கள் இருப்பது புளகாகிதம் தரும் நினைவுகளாய் இனிக்கிறது.
இலங்கையிலிருக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடனும் தன் கையாட்களுடனும் நேரடியாகவே விவாதித்திருக்கிறேன். ஒரு கேள்வியில் அவர்கள் திணறுவார்கள். அதுதான் திருட்டு வட்டு விவகாரம்.ஏன் மூன்றாம் உலக நாடுகளில் மைக்ரோசொப்ட் உற்பத்திகள் தாராளமாக கள்ள சந்தையில் கிடைக்கின்றன? தத்தமது நாடுகளின் மக்கள் போராட்டங்களை எல்லாம் ஏகாதிபத்திய உதவியோடு நசுக்கி அழிக்கும் நாட்டு அரசுகள் எல்லாம் ஏன் திருட்டுவட்டுக்களை ஆசீர்வதித்து வளர்க்கின்றன?
இதுதான் சூட்சுமம்.
நீங்கள் எப்போதும் எமது உற்பதிகளுக்கே அடிமைகளாக இருக்கவேண்டும். நீங்கள் எமது உற்பத்திகளை மட்டுமே கற்கவேண்டும். எமது உற்பத்திகளை பயன்படுத்துவதைத்தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரிந்துவிடக்கூடாது. எமது உற்பத்திகளை வைத்தேதான் நீங்கள் பணம் பண்ண வேண்டும். பணம் பண்ணுங்கள். தொழில் பண்ணுங்கள். தடையில்லை. ஆனால் எமக்கு கட்டவேண்டிய கப்பத்தை மட்டும் எக்காலத்திலும் நீங்கள் கட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.
ஆம் நவீன கப்பம்.
தகவற் தொழிநுட்பத்தில் எந்த உச்சிக்கு நீங்கள் சென்றாலும், அடிப்படையான மென்பொருட்களை நீங்கள் அவர்களிடமே வாங்கவேண்டும். லைசென்ஸ் என்ற பெயரில் அவர்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கவேண்டும். அவர்களைத்தாண்டி தொழிநுட்பம் இல்லை. அவர்களைத்தாண்டி எதுவும் இல்லை.
உங்கள் இராணுவப்புலனாய்வு அலுவலகத்தின் அதியுயர் ரகசியம் காக்கும் கணினி, அவர்களது மென்பொருட்கள் மீதுதான் இயங்கும். அந்த மென்பொருட்கள் எந்த தகவலை யாருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது என்பதை நீன்கள் கண்டுபிடிக்க வழியில்லை. எல்லாம் மூடிய தொழிநுட்பம்.
ஏகாதிபத்திய வடிவத்தின் சின்னச்சின்ன உதாரணங்களைத்தான் சொன்னேன்.
இந்த ஏகாதிபத்தியத்துக்குத்தான் நாங்கள் மாற்றுக்களை தேடவேண்டியிருக்கிறது. கோக்குக்கு எப்படி பெப்சி மாற்றாகாதோ, MTV க்கு எப்படி Star TV மாற்றாகாதோ, KFC க்கு எப்படி Mc donald மற்றாகாதோ அப்படித்தான் மைக்ரோசொப்டுக்கு இன்னொரு தனியுரிமை மென்பொருள் நிறுவனம் மாற்றாக முடியாது.
லினக்ஸ் பற்றி பேசிக்கொண்ட்ருந்தபோது தோழர் சி. சிவசேகரம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை துரத்த ஜ்ப்பான் ஏகாதிபத்தியத்தை வரச்சொல்வது போலிருக்கிறது உங்கள் கதை என்று நையாண்டி பண்ணினார். எதை விளங்கி இதை சொன்னாரோ எனக்கு தெரியாது. என்றைக்காவது ஒருநாள் இதைப்பற்றி அவருக்கு விளக்குவேன். நான் மிகத்தெளிவாகவே உள்ளேன். மக்களுக்கான தொழிநுட்ப மாற்று எனொபது திறந்த மூல தொழிநுட்பங்களாகவே அமைய முடியும்.
ஒருவேளை கேரளா அரசு மைக்ரோசொப்டுக்கு பதிலாக ஆப்பிள் கணினிகளை பாடசாலைகளுக்கு வழங்கி, இனி பாடத்திட்டத்தி மாக்கின்டோஷ் தான் இருக்கும் என்று அறிவித்திருந்தால் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிராது. க்னூ லினக்ஸ் என்ற வுடன்தான் எல்லோருக்கும் மடி எரிகிறது.
ஏனென்றால் மற்றெந்த நிறுவனம் வந்தாலும் லாபமும் எம் மூளை வளங்களும் ஏகாதிபத்தியத்துக்கு போகும். க்னூ லினக்ஸ் வந்தால் எதுவும் வெளியே போகாது.
உலகில் இன்று இயங்கிவரும் பல க்னூ லினக்ஸ் கம்பெனிகள் சமுதாய மூளை உழைப்பை சுரண்டி லாபம் பண்ணிக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை எந்தவிதத்திலும் நான் இங்கே இருட்டடிப்பு செய்யவில்லை.
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற புள்ளியில் நின்றே நான் க்னூ லினக்சை ஆதரிக்கிறேன்.
திறந்த மூல தத்துவம், போலி சுரண்டல் உலகமயமாக்கல் அடிப்படையை கொண்டதல்ல, ஆரோக்கியமான சர்வதேசிய தத்துவங்களை தன்னகத்தே கொண்டது.
தொழிநுட்பம் கட்டற்று, திறந்திருக்கவேண்டும் என்கிற அதன் அடிப்படை, அமெரிக்க முதலைகளின் அடிப்படை ஆசைக்கே ஆப்பு வைக்கிறது.
திறந்த மூலத்தை பயன்படுத்தி நிகழும் சுரண்டல்களுக்கும் குறைவில்லை. அதனால்தான் முதலாளிகள் கூட அதனை அங்கீகரிக்கிறார்கள். இன்னொரு சுரண்டல் வடிவமாக அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.ஆனால் நாம் சமுதாய நிலை நின்று, மக்கள் நிலை நின்று திறந்த மூல இயக்கத்தினை மக்களுக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.
ஏன் சோசலிசமும், கூட்டுறவும் கூடத்தான் அமெரிக்காவிலும் அதன் கையாள் நாடுகளிலும் நல்ல லாபம் பண்ணும் வழிமுறைகளாக மாற்றப்பட்டுள்ளது.
கேரளா தற்போது பாடசாலைகளில் க்னூ லினக்ஸ் கற்பிக்க ஆரம்பிக்கப்போகிறது. அடுத்த தலைமுறை க்னூ லினக்ஸ் உடன் பரிச்சயமாகி வெளியே வரப்போகிறது. இவ்வாறு வந்தால் இயல்பாகவே நிறுவனங்கள் க்னூ லினக்ஸுக்கு மாறும். நாளடைவில் மைக்ரோசொப்ட் போன்ற நிறுவனங்களின் கனவு தவிடுபொடியாகும். ஏனெனில் க்னூ லினக்ஸ் யாருக்கும் சொந்தமில்லை. முற்றிலும் இலவசம். பொதுமகக்ளுடைய உடைமை.
கேரளாவின் இளைஞர்கள் சிறு சிறு க்னூ லினக்ஸ் தொழில்களை ஆரம்பிக்கலாம். தமக்கென ஒரு வழங்கலை செய்து அதற்கு ஆதரவளித்து பணம் பண்ணலாம். இவ்வாறான சிறு சிறு தொழிற்றுறைகளை மாநிலமெங்கனும் வளர்த்தெடுக்கலாம். பணம் வெளியே போகாது. போதிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.
எந்த ஒரு நிறுவனமும் க்னூ லினக்சை வைத்து இன்னொரு ஏகாதிபத்தியத்தை கொண்டுவர முடியாது. ஏனென்றால் அது திறந்த தொழிநுட்பம். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அதனை பயன்படுத்தலாம். அது மக்களுடைய சொத்து.
எல்லாவற்றுக்கும் மேலாக, கேரள அரசின் முடிவை எதிர்ப்பவரக்ளுக்கு ஒரு அடிப்படை உண்மை புரிகிறதில்லை.
ஒரு அரசு, தனது பள்ளிக்கூடங்களில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு லாபம் பண்ணிக்கொடுங்கள் என்று எப்படி கற்பிக்க முடியும்?அது எவ்வளவு பெரிய அநியாயம்?
சமுதாய உழைப்பில் உருவான, மக்களுக்கு சொந்த மான மாற்று இருக்கும் போது அதனை கற்பிப்பதுதானே நியாயம்?
இறுதியாக திறந்த மூல தத்துவ வடிவமைப்பாளர் ரிச்சர்ட் ஸ்டால்மனின் வார்த்தைகள்,
If you teach students to use proprietary software you are teaching them to be helplessly dependent on a particular company. And that is not good for society as a whole. So, the schools should not do it. What the Kerala government is doing is the right thing and all other states in India should be doing this.

www.sooriyan.com

0 Comments:

Post a Comment

<< Home