
கருணா அணிக்காக சிறார்களை படைக்குச் சேர்ப்பதாக இலங்கைப் படையினர் மீது ஐ.நா குற்றச்சாட்டு
13 நவம்பர், 2006 - பிரசுர நேரம் 16:54 ஜிஎம்டி bbc
இலங்கையில் கருணா அணியின் சார்பில் இலங்கை அரசாங்கப் படையினர் சிறார்களை போர்ப் படைக்கு சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் உட்பட கிழக்கு மாவட்டங்களில் கருணா அணியினர் மிகவும் மோசமாக சிறார்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவு இருப்பதாகவும் இலங்கை சென்ற ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறார்கள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த விவகார சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் சிறார்களை கடத்தும் கருணா அணியினர் எவ்வித தடையும் இன்றி இராணுவ சோதனைச் சாவடிகள் ஊடாகச் சென்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதுமாத்திரமன்றி சில கிராமங்களை சுற்றிவளைக்கும் படையினர் அங்கு இளைஞர்களைப் படம்பிடித்து, அவர்களில் எவரை கடத்தலாம் என்று கருணா அணியினருக்குக் கூறுவதாகவும் அலன் றொக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை விடுதலைப்புலிகளும் தொடர்ந்தும் சிறார்களை கடத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளா.
இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமையுடனான சந்திப்பின் போது அவர்களுக்கு சுட்டிக்காட்டியதாகவும் அலன் றொக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தான் சென்ற இடங்களில் மக்கள் அச்ச உணர்வுடனும், பாதுகாப்பற்ற உணர்வுடனும் காணப்படுவதாகவும், தமது பாதுகாப்புத் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தமது பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இலங்கை மக்கள் இழந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக் குறித்து கருத்துக் கூறிய இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல அவர்கள், இது குறித்து ஏற்கனவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அவை குறித்து விசாரிக்க அவர் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமது அமைப்பினரின் மீதான குற்றச்சாட்டை கருணா அணியினரும் மறுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
<< Home