Saturday, October 14, 2006


சமாதானத்திற்கான நோபல் பரிசு வங்காள தேசத்தை சேர்ந்த முகமுது யூனுஸுக்கு வழங்கப்படுகிறது

நோபல் பரிசினைப் பெற்றுள்ள முகமது யூனுஸ் உலகின் பல்வேறு வளர்முக நாடுகளில் நன்கு அறியப்பட்டவர். உலக ஏழைகளின் வங்கியாளர் என்றே அவர் அதிகம் அறியப்படுபவர்.
வங்காளதேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைப் பேராசிரியராக அவர் இருந்த காலத்தில் கிராமின் வங்கி முறை என்கின்ற திட்டம் அவருக்கு உருவானது. கிராமின் அதாவது இந்த கிராம வங்கி முறையின் மூலம் கிட்டத்தட்ட எழுபது இலட்சம் வறிய மக்களுக்கு சிறிய தொகையிலான கடன் வழங்கி அதன் மூலம் அந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முனைவதே இதன் குறிக்கோளாகும்.
இந்தத் திட்டத்தில் பெரும்பாலும் கடன் பெற்றவர்கள் வங்காளதேச மக்களே அதிலும் குறிப்பாக பெண்கள். இத் திட்டம் வங்காள தேசத்தில் எதிர்ப்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தைக் கண்டதற்குப் பின் பிற நாடுகளிலும், குறிப்பாக ஏழை நாடுகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விருது கிடைத்த செய்திக்கு பின் கருத்து வெளியிட்ட முஹமது யூனுஸ், எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என பல காலமாக பலர் கூறி வந்தாலும், அப்படி நடக்கப் போகிறதா என்பது எனக்குத் தெரியாது. இந்த விருது வழங்கப்பட்டதை நான் மிக நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
மேலும், இது எனக்கு மட்டும் கிடைத்த நல்ல செய்தி அல்ல, மக்களுக்காகவும், இந்த மைக்ரோ கிரடிட் முறையினால் பயனடைந்த அனைத்து மக்களுக்கும் கிடைத்த நல்ல செய்தியாகவே நான் கருதுகிறேன்என்றார் முகமது யூனுஸ்
இத் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பேராசிரியர் யூனுஸ் தன்னுடைய சொந்தப் பணத்திலேயே பெண்கள் சிலருக்கு கடன் வழங்கினார். இவர் அறிமுகப்படுத்திய இந்த மைக்ரோ ஃபைனான்ஸ் அதாவது சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் கடன் வழங்கும் பாரம்பர்ய வங்கிக் கடனுக்கு மாறாக இந்த முறையின் மூலம், எவ்விதமான சொத்து ஜாமீனோ அல்லது கடனுக்கு ஈடாக பொருள் எதுவும் காட்டாமலோ கூட ஏழை மக்கள் தங்களின் பொருளாதார நிலையை முன்னேற்றக் கடன் பெற முடியும். இதுதான் இந்த கிராமின் வங்கித் திட்டத்தின் சிறப்பு அம்சம். இதனால் எந்தவித சொத்துக்களும், நிதி ஆதாரமும் இல்லாத ஏழை எளிய மக்கள் கூட, ஏன் பிச்சைக்காரர்கள் கூட இந்தத் திட்டத்தால் கடன் வாங்க முடிந்தது.
bbbtamil 11.10.2006

0 Comments:

Post a Comment

<< Home