Saturday, June 13, 2009

ஆழ்ந்த துயரமும் சோர்வும் கொண்ட தடுப்பு முகாம்கள்:



அவளுடைய கையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் அல்பத்தை வைத்திருந்தாள். அவளைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமும் அவள் அதனைக் காண்பித்தாள். அவள் தமிழில் என்ன சொன்னாள் என்பதை அறிய எனக்கு ஒரு வழியும் இருக்கவில்லை. நான் அந்தப் படத்தில் மூன்று சிறுவர்களைக் கண்டேன். நான் அவளுடைய குரலைப் புரிந்து கொண்டேன். இது அங்குள்ள ஒருவருடைய மிக ஆழ்ந்த வலி, துன்பம்!
அவளுடைய கதையை ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நான் புரிந்து கொண்டேன்.
கடந்த மாதம் நடைபெற்ற இலங்கையின் மோதலில் அவள் தனது ஒரே மகளையும், இரண்டு மகன்களையும் கணவனையும் இழந்திருந்தாள்.
அவளுடைய இன்னும் ஒரு மகன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஆனால் இப்போது அவன் அங்கு இல்லை. அவன் தப்பிவிட்டானா இன்னமும் உயிருடன் இருக்கிறானா அல்லது எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான் என்ற எதையும் அவள் அறியாள். அவனைத் தேடுவதற்கு அவள் அனுமதிக்கப்படவும் இல்லை.
அந்த கைவிடப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் ‐ அது இப்போது முகாமாக்கப்பட்டுள்ளது ‐ காவலுக்கு நிற்கும் சிப்பாய் சொன்னான், அவள் மிகவும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளாள் என்று. இருக்கலாம். ஆனாலும் அவளும் ஒரு மனிதப்பிறவி தானே?
அரசாங்கத்தால் நடாத்தப்படும் இடம் பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பல முகாம்களில் இத்தகைய ஆயிரக்கணக்கானவர்களின் ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன.
இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுடைய நிலை மிக அபத்தமானது தான்.
இந்த மக்கள் தங்கியிருக்கும் இம்முகாம்கள் பெருமளவிற்கு வெளியுலகிலிருந்து மறைக்கப்பட்டுள்ளன. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மாத்திரம் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அந்நிறுவனங்களும் எந்நேரமும் வெளியில் தூக்கி எறியப்படலாம் என்ற நிலை. இவ்வாறான இரண்டு முகாம்களுக்குள் நுழைய எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
புல்மோட்டைக்கருகிலுள்ள சகனாமா நலன்புரி நிலையத்திற்கும், கஞ்சவெளி சிங்கள மகாவித்தியாலயத்திலுள்ள முகாமிற்கும் நான் சென்றேன். அத்தோடு அங்குள்ள உள்ளுர் வைத்தியசாலைக்கும் செல்லும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
நான் அங்கு கண்டவை காணக்கூடியவையல்ல. அந்த இரண்டில் ஒரு முகாம் மிகக்குறைந்தளவிலாயினும் மனிதத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய விதத்தில் மனிதாபிமான தரத்திலமைந்திருந்தது. ஆனால் மிகப்பற்றாக் குறையான தரம் அது.
வித்தியாலய நலன்புரி நிலையத்திலிருந்த முகாமில் நாலாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு 20 கழிப்பறைகளே இருந்தன. சராசரியாக 190 பேர் ஒரு கழிவறையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரும் தற்போது இம்முகாமில் இருப்பவருமான பார்மஸிஸ்ட் ஒருவர் இச்சுகாதாரக் கேடான நிலைமை குறித்து அக்கறையுடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலைமை தொற்று நோய்கள் இலகுவாக முகாம்களில் பரவக் காரணமாகி விடும் என்றும் அவர் அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அவர் முகாமின் வெக்கை குறித்தும் கவலைப்பட்டார். காலை எட்டு மணிமுதல் மாலை ஐந்து மணி வரை கடும் வெப்பம் காரணமாக ரென்ட்டுக்குள் இருக்கமுடியாததால் இந்த மக்கள் அதற்கு வெளியே வந்து நிற்கின்றனர். தண்ணீர் இங்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
ஆனாலும் நான் சொல்வேன் இது நல்ல ஒரு முகாமென்று. ஏறத்தாழ அங்கு ஐந்து குசினிகள் அமைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சமைக்கவும் பரிமாறவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தார்கள். சிறுவர்கள் விளையாட என ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் படிப்பதற்கென்று தற்காலிக வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டிருந்தது.
2300 இடம் பெயர்ந்தவர்களைக் கொண்ட சகனாகம நலன்புரி நிலையம் அவ்வளவு அதிர்ஷ்டகரமானதல்ல. ஒரு சிறிய பாடசாலையிலேயே அது அமைக்கப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான மக்கள் காரணமாக பாடசாலை வராந்தாக்களிலேயே பிளாஸ்டிக் கூரையின் கீழ் அவர்கள் படுத்துறங்குகிறார்கள்.
சிறுவர்களுக்குப் போதுமான இடவசதி அங்கில்லை. உணவு நேரம் மக்கள் உணவுக்காக கியூவில் முண்டியடித்துக் கொள்கிறார்கள். உணவு வெளியில் தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது. மனிதக் கழிவுகளால் பாடசாலை நாற்றமெடுக்கிறது.
ஒரு சிறிய வகுப்பறைக்குள் 15 குடும்பங்கள் கிட்டத்தட்ட 60 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கிடையில் ஒரு சிறுவன் வெள்ளைத்துணியாலும் இலைகுழைகளாலும் மூடப்பட்டபடி படுத்திருக்கிறான். அவனுக்கு சிக்கின் பொக்ஸ் எனச் சொல்கின்றனர். இது பரவுமென்பதால் அங்குள்ள குடும்பங்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளன. ஆனால் அவர்களுக்குச் செய்வதற்கு என்ன தான் உள்ளது? நோய் பரவாமலிருக்க நோயுற்றவரை தனிமைப்படுத்தி வைத்திருக்க அங்கு வேறிடம் ஏது?
இதுவெல்லாவற்றையும்விட மிக மோசமானது வைத்தியசாலை அமைந்துள்ள பகுதி. அங்கு துயருற்றிருக்கும் ஒரு கணவனை இழந்த பெண்ணைக் கண்டேன். ஒரு வயதான பெண் வைத்தியசாலை நிலத்தில் இறந்து கொண்டிருந்தாள். அவளுடைய வாயும் கண்களும் இலையான்களால் மொய்க்கப்பட்டிருந்தது. ஏன் இந்த வயதான பெண்மணிக்கு ஒருவரும் உதவவில்லை என அங்கிருந்த சிப்பாயை நான் கேட்டபோது அவன் மிகச்சாதாரணமாக தோள்களை ஒருமுறை குலுக்கிக் கொண்டான்.
மக்கள் கூட்டம் அதிகமாகையால் அங்கிருந்து வந்த நாற்றம் மூக்கைத் துளைத்தது. காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் சற்றுப் புறம்பாக வைக்கப்பட்டிருந்தார்கள். நிலமும் படுக்கையும் சுவர்களும் மிகுந்த அழுக்காக இருந்தது.
இந்த மக்களிடையே நடந்து சென்று கொண்டிருக்கும் போது சகோதரனும் சகோதரியுமாமான இரண்டு சிறுவர்களை நான் கண்டேன். விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்குமான இறுதி மோதலில் அவர்களது பெற்றோர் கொல்லப்பட்டிருந்தனர்.
அச்சிறுபெண் தனது வலது கையின் நான்கு விரல்களையும் இழந்திருந்தாள். ஒரு பெண்மணி அவ்விரு சிறுவர்களையும் அழைத்து வந்திருந்தாள். அச்சிறுமிக்குச் சத்திரசிகிச்சையின் போது அப்பெண்மணியும் கூடவே இருந்தாள். நான் அச்சிறுவர்களைச் சந்தித்த போதும் அப்பெண்மணி அவர்களுடன் கூடவே இருந்தாள். அப்பெண்மணி அச்சிறுவர்களுடைய தாயார் அல்ல. இச் சிறுவர்கள் முகாம்களை விட்டு வெளியேற ஆறு மாதமோ ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோ கூட எடுக்கும். அவர்களுடைய எதிர்காலம் என்பது கேள்விக்குறி தான்.
நான் பார்த்தது சிறிய முகாம்களைத் தான். இதனைவிடப் பலமடங்கு பெரிய முகாம்கள் வவுனியாவில் உள்ளன. இந்த எட்டாயிரம் மக்களையும் கட்டப்படுத்துவதற்கு பெருமளவுக்கு இராணுவமும் அதன் வளங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முகாமில் நான் சென்ற இடங்கள் எங்கும் இச்சிறுவர்கள் என்பின்னாலும் என் கையைப்பிடித்தபடியும் வந்து கொண்டிருந்தார்கள். தாங்கள் கண்ட சந்தித்த ஒவ்வொன்றையும் அவர்கள் விபரித்தார்கள். மேற்குலகம் இவர்களைக் கண்டு கொள்ளாதபடி இவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். நம்பிக்கை ஒன்று தான் அவர்களிடமுள்ளது. அவர்களிடமிருந்து விடுபட்டு வெளியே வர நான் மிகுந்த பிரயத்தனப்பட்டேன்.
நன்றி: ரொய்ட்டர்
விசேட மொழியாக்கம் ‐ குளோபல் தமிழ்ச்செய்திகள் :
நன்றி:
மூலம் - Reuters
-------



http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=10604&cat=11

0 Comments:

Post a Comment

<< Home